|
Article on other languages:
|
இலை என்பது மரஞ்செடி கொடிகளின்[1] ஓர் உறுப்பு. இதுவேஒளிச்சேர்க்கைவழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.
இலையின் அமைப்புமரஞ்செடி கொடிகளில் இலைகளின் புறத்தோற்றம் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன சில அகலமாக அடிவிரிந்தும் நுனி குறுகியும், சில இலைகளின் விளிம்பில் பல்வேறு நெளிவுகள் கொண்டும், சில ஊசி போன்ற வடிவிலும் உள்ளன. பொதுவாக, வித்துத் தாவரமொன்றின் முழுமையான அமைப்பைக் கொண்ட இலை, இலைக்காம்பு, இலைப்பரப்பு, இலையடிச் செதில் ஆகிய உறுப்புக்களைக் கொண்டிருக்கும். இலைக்காம்பு, தாவரத்தின் தண்டுடன் இனைக்கப்பட்டிருக்கும் இடம் கணு (இலைக்கணு) எனப்படும். எல்லா வகைத் தாவரங்களின் இலைகளும் மேற்கூறிய உறுப்புக்கள் அனைத்தையும் கொண்டிருப்பதில்லை. சில இனங்களில், இலையடிச் செதில்கள் இணையாக அமைந்திருப்பதாகத் தெரிவதில்லை அல்லது முற்றாகவே இருப்பதில்லை. இலைக்காம்புகளும் சில இனங்களில் இல்லாதிருக்கலாம், இலைப்பரப்பும் தட்டையாக இல்லாதிருக்கக்கூடும். இனத்துக்கு இனம் பெருமளவில் வேறுபடுகின்ற இலை அமைப்புக்கள் பற்றி இலை உருவியல் பகுதியின் கீழ் விரிவாக ஆராயப்படும். இலையுதிர்க்கும் தாவரங்கள் குறிப்பிட்ட பருவ காலப்பகுதிகளில் தங்கள் இலைகளை உதித்துவிடுகின்றன. இலை, பின்வரும் திசுக்களைக் கொண்டுள்ள ஒரு தாவர உறுப்பு ஆகும்:
புறத்தோல்புறத்தோல் என்பது பல படைகளாக அமைந்து இலைகளை மூடியிருக்கும் திசுள் (கலம்) தொகுதியாகும். இது இலையின் உட்பகுதித் திசுள்களை புறச் சூழலிலிருந்து பிரிக்கின்றது. புறத்தோல், நீரிழப்பைத் தடுத்தல், வளிமப் பரிமாற்றத்தை ஒழுங்கமைத்தல், வளர்சிதைமாற்றத்துக்கான நீர்மங்களைச் சுரத்தல், சில இனங்களில் நீரை உறிஞ்சுதல் ஆகியவை உள்ளிட்ட பல செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. பல இலைகளில் மேல் புறத்தோலும், கீழ் புறத்தோலும் வெவ்வேறு விதமான அமைப்புக்களை உடையனவாக இருப்பதுடன் வெவேறு செயற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. புறத்தோல் பொதுவாக ஒளி புகவிடும் தன்மை கொண்டிருப்பதுடன், நீரிழப்பைத் தடுப்பதற்காக அவற்றின் மேல் மெழுகு போன்ற தோலி எனப்படும் பூச்சும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் மேற்பக்கத் தோலி, கீழ்ப்பக்கத் தோலியிலும் தடிப்பானதாக இருக்கும். வரண்ட பகுதித் தாவரங்களின் இலைகளில் தடிப்புக் கூடிய தோலிகளும், ஈரவலயத் தாவரங்களின் தோலிகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவையாகவும் காணப்படுகின்றன. புறத்தோல் திசுக்கள் பல்வேறுபட்ட திசுள் (கலம்) வகைகளைக் கொண்டுள்ளன. புறத்தோல் திசுள்கள், காப்பணுக்கள், துணைத் திசுள்கள், புறத்தோல் உரோமங்கள் என்பன இவற்றுள் அடங்கும். புறத்தோல் திசுள்களே இவற்றுள் எண்ணிக்கையில் அதிகமானவையாகவும், பெரியனவாகவும், சிறப்புச் செயற்பாடுகள் குறைந்தவையாகவும் உள்ளன. இருவித்திலைத் தாவர இலைகளின் புறத்தோல் திசுள்கள், ஒருவித்திலைத் தாவர இலைகளில் உள்ளவற்றிலும் நீளம் கூடியவையாகக் காணப்படுகின்றன. புறத்தோலில், இலைத்துளைகள் எனப்படும் துளைகள் பரவியுள்ளன. இவற்றுடன், இத் துளைகளின் இருபுறமும் பசுங்கணிகம் அடங்கிய காப்பணுக்களும், இரண்டு முதல் நான்கு எண்ணிக்கையான துணைத் திசுள்களும் அமைந்திருக்கும். இவை கூட்டாக இலைத்துளைத் தொகுதி எனப்படும். இலைத்துளைத் தொகுதி, இலையின் உட்புறத்துக்கும், வெளியிலுள்ள வளிமண்டலத்துக்கும் இடையிலான வளிமம் மற்றும் நீராவிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துகின்றது. பொதுவாக, கீழ் புறத்தோலில், மேல் புறத்தோலிலும் கூடிய எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படுகின்றன. நடுத்திசுமேலும் கீழும் அமைந்துள்ள புறத்திசுப் படலங்களுக்கு இடையே இலையின் உட்புறத்தின் பெரும்பகுதி நடுத்திசு எனப்படும் பஞ்சுத்திசுக்களால் ஆனது. இந்தத் தன்வயமாக்கல் (assimilation) திசுக்களே தாவரங்களில் ஒளித்தொகுப்பு நடைபெறுகின்ற முக்கியமான இடங்களாகும். பன்னங்களிலும், பெரும்பாலான பூக்கும் தாவரங்களிலும், நடுத்திசு இரண்டு படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
புறத்தோலில் காணப்படும் இலைத் துளைகள் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சிறிய அறைகளுக்குத் திறந்திருக்கும். இவ்வறைகளுக்குப் பஞ்சுத் திசுப் படையில் உள்ள வளி இடைவெளிகளுடன் தொடர்பு இருக்கும். நடுத்திசுவின் இந்த இரு வேறுபட்ட படைகள், நீர்த் தாவரங்களிலோ, சதுப்பு நிலத் தாவரங்களிலோ காணப்படுவதில்லை. சில சமயங்களில், புறத்தோல் மற்றும் நடுத்திசு கூடக் காணப்படாமல் இருக்கலாம். இத்தகைய இலைகளில் ஒருதன்மைத்தான மெல்லிய சுவர்களைக் கொண்ட திசுள்கள் பெரிய வளிம இடைவெளிகளினால் பிரிக்கப்பட்டுக் காணப்படும். இவற்றின் இலைத் துளைகள் இலையின் மேற் பகுதியிலேயே காணப்படும். இலைகள் பொதுவாகப் பச்சை நிறமானவை. இது கணிகங்களில் (plastids) காணப்படும் பச்சையத்தினால் ஏற்படுகின்றது. பச்சையத்தைக் கொண்டிராத தாவரங்கள் ஒளித்தொகுப்புச் செய்ய முடியாது. மேற்கோள்களும் குறிப்புகளும்
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.